சுங்கத்திணைக்கள வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை
சுங்கத் திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சிக்கியுள்ள 5,000 கொள்கலன்களை அகற்றுவதற்கான அவசரத் திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்த வார இறுதியில் விடுவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரியில் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தங்கள்
தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது வழமையானது எனவும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொழிற்சங்கங்கள் முடிவெடுக்கும் போது அவர்களின் தொழில், நிறுவனம் மற்றும் தற்போதைய தேசிய நிலைமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்நிலையில், வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களின் கடைசி முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |