பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நட்டஈடு வழங்க நடவடிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைவாக நட்டஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (20.01.2024) விவசாயிகளுக்கான உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விவசாயிகள் பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலா 6 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 வீதம் எமது அமைச்சின் ஊடாக மானியமாகவும், மிகுதி 50 வீதம் பயனாளிகளும் வழங்குகிறார்கள்.
மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரும், நாங்களும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதில் ஒரு கட்டமாகவே இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீரற்ற காலநிலையினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதோடு மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால், நட்டஈடு வழங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளதோடு தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
மக்களது பிரச்சினை
மேலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் காலப்பகுதியில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதியாக வந்து மக்களது பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
ஆகவே, ஜனாதிபதியை தேர்தலில் ஆதரிக்கக் கூடிய நிலையே வரும்.மக்களும் அதனையே விரும்புகின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |