வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை
அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கைகளை வடமாகாண சபை ஆரம்பித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் (Northern Province) பிரபல பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு அப்பாடசாலையின் அதிபரால் சேதம் ஏற்படுத்தியதை ஆரம்ப புலன் விசாரணைகள் மூலம் உறுதி செய்து கொண்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல விசாரணைக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே இது சாத்தியமானதாக இதனுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தின் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதில் அதிபராக கடமையாற்றி வருபவர் மீதே வடமாகாண சபை தன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மாகாண நிதி விதியின் கீழ் விசாரணை
குறித்த பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டு வந்திருந்த பதிலதிபர் மீதான பலமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பழைய மாணவர் சங்கம் மற்றும் நடைமுறையில் உள்ள பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன தொடர்சியாக சுமத்தி வந்திருந்தன.
பதிலதிபரின் ஊழலுக்கு எதிராக வலயக்கல்வி அலுவலகம் துணுக்காய், வடமாகாண கல்வித் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்,கல்வியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றின் ஊடாக எடுத்துரைப்புக்களை மேற்கொண்டிருந்த பாடசாலைச் சமூகம் அந்த பாடசாலையின் அரச சொத்துக்களை பேணிப் பாதுகாப்பதில் தொடர்ந்து போராடி வருகின்றது.
பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட நட்டமானது ரூபா 500,000 (ஐநூறு ஆயிரத்திற்கும்) மேற்பட்ட நட்டமாக அமைவதினால் மாகாண நிதி விதி 70க்கு அமைய விசாரணை சபை ஒன்றினை அமைப்பதற்கு ஏதுவாக சபைக்குரிய அங்கத்தவர்களை சிபார்சு செய்து வழங்குமாறு வட மாகாண சபையினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் NP/3/1/GA/06/08/2024 இலக்க 22.08.2024 ஆம் திகதியின் கடிதத்திற்கு பதிலளிக்கும் பதில் கடிதம் NP/09/FRM/R2/06/_ /2024 இன் மூலம் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால நீடிப்பு கோரிய அதிபர்
கடந்த மூன்று வருடங்களாக பாடசாலையின் பதிலதிபராக குற்றம் சாட்டப்பட்டவர் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சானது பதிலதிபரிடம் NP/3/1/GA/06/2/2024 இலக்கமும் 10.08.2024 திகதியிடப்பட்ட குற்றப்பத்திரத்தினை வழங்கி அதற்கு பதிலளிக்குமாறு கோரியிருந்தது.
பதிலளிப்புக்கான சில தேவைகளை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பதினான்கு நாட்கள் போதாது என பதிலதிபர் எடுத்துரைத்துள்ளார்.
பதிலளிப்புக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தனக்கு போதியதன்று என கூறி பதிலளிப்புக்கான கால நீடிப்பினை அதிபர் வலயக்கல்வி அலுவலகம் துணுக்காய் ஊடாக வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரியிருக்கின்றார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்
பாடசாலையின் அரச சொத்துக்களை பேணிப் பாதுகாத்து அடுத்தடுத்து பாடசாலையில் கல்வி கற்க வரும் பிரதேச மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
பாடசாலை நிர்வாகங்களை கொண்டு நடத்துவதற்காக நியமிக்கப்படும் அதிபர் அல்லது பதிலதிபர் போன்ற உயர் நிர்வாக அதிகாரிகள் அவற்றை தவறான வழிகளில் பயன்படுத்துவதோடு சேதமடையச் செய்தல், அரச சொத்துக்களுக்கு நட்டமேற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை செய்வதால் மாணவர்கள் பாரியளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாடசாலையின் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகம் தனது எதிர்ப்புக்களை பலமுறை பதிவுசெய்து வரும் போதும் அதனை அக்கறை கொள்ளாது அசட்டை செய்து கொள்ளும் போக்கினை குறித்த பாடசாலையின் பதிலதிபர் தலைமையிலான பாடசாலை நிர்வாகம் செய்து வந்திருந்தது.
எனினும் குற்றப்பத்திர தயாரிப்பு மற்றும் அதற்கு பதிலதிபரை பதிலளிக்க கோரியது மற்றும் பதிலளிப்புக்கான கால அவகாசத்தை நீட்டிப்புச் செய்து தருமாறு பதிலதிபர் கோரியிருந்தது போன்ற செயற்பாடுகளை உற்று நோக்கும் போது ஊழலுக்கு எதிரான பாடசாலைச் சமூகத்தின் தொடர்ச்சியான போராட்டங்களை வடக்கு மாகாண சபை கருத்தில் எடுத்து செயலாற்றத் தொடங்கியுள்ளது.
விளைவில் வினைத்திறன்
இது விரைவாகவும் வினைத்திறனாகவும் இருப்பதோடு இந்த செயற்பாடுகள் முடிவுறுத்தப்படும் வரை பதிலதிபரை மற்றொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யவோ அல்லது வலயக்கல்வி அலுவலகம் துணுக்காயின் உள்ளக செயற்பாடுகளில் ஈடுபடுத்தவோ முயற்சிக்க கூடாது.
முடிவுறுத்தலின் போது குற்றம் நிருபணமாகும் போது இதே பதிலதிபரை தரம் 2 இல் இருந்து தரம் 1 தரமுயர்த்துவதற்கான தேர்சிகளில் வெற்றி பெற அவரை ஈடுபட பணித்து அதே பாடசாலையின் சிறந்த முன்னுதாரணமான ஒரு அதிபரின் வெளிப்படுத்தல்களை வெளிக்காட்டி செல்லவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
அப்போது தான் மீண்டுமொரு முறை அவர் தவறிழைத்துக் கொள்ளும் சூழல் இல்லாத மனநிலை மாற்றம் அவரில் ஏற்படும் என உளவளத்துறை ஆலோசகர்கள் சிலருடன் இது தொடர்பில் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலின் போது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள்.
எனினும் இந்த விடயத்தில் நடைபெறப்போகும் விளைவுகள் தொடர்பில் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |