சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்ற தவறுகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வேறு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை வியாபாரங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் மேலும் இவ்விடயம் குறித்து இன்று மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டமும் ஒரு சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்குப் பரவாமல் தவிர்ப்பதற்கு இறுக்கமான நடைமுறைகளை இங்குள்ள மக்கள் பின்பற்ற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும், சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து அந்நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், கொரோனா தொற்று அதிகமுள்ள பிரதேசங்களுக்கு செல்வதையும், பிறமாவட்டங்களுக்கு செல்வதனையும் தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றவர்கள் தொடர்பில் சுகாதாரத் துறையினருக்குத் தகவல்களை வழங்குமாறும், தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடல், வெளியில் செல்லல், பொது இடங்களுக்குச் செல்லல் போன்றவற்றைத் தவிர்க்குமாறும் சபையின் தவிசாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.