மனித உரிமை ஆர்வலர் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்தோனேசியாவில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராகப் போராடி வந்த மனித உரிமை ஆர்வலர் ஆன்ட்ரி யூனுஸ் என்பவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய வழக்கில், அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் 4 பேருக்கு இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜகர்தாவில் உள்ள இராணுவ நீதிமன்றத்தில் இன்று(11.06.2026) நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிகளான இராணுவத்தின் மூலோபாய புலனாய்வு முகமையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கும் வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதன்மை குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற மூவருக்கு முறையே இரண்டரை ஆண்டுகள், 2 ஆண்டுகள் மற்றும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தலைமை நீதிபதி ஃப்ரெடி ஃபெர்டியன் இஸ்நார்டான்டோ உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்த நபர்
கடந்த மார்ச் 12 அன்று 'கொன்ட்ராஸ்' என்ற மனித உரிமை அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரான ஆன்ட்ரி யூனுஸ் (27), மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது கொடூரமாக அசிட் வீசி தாக்கல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் யூனுஸின் ஒரு கண் பார்வை முற்றிலும் பறிபோனதுடன், அவரது முகம் மற்றும் உடலின் 20 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாகின.
ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் அரசாங்கம், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் பங்கை விரிவுபடுத்துவதற்கு எதிராக யூனுஸ் தொடர்ந்து, குரல் கொடுத்து வந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.
இந்த வழக்கில் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருந்த போதிலும், இராணுவ அதிகாரிகளுக்குக் குறைவான தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.