இருவேறு பகுதிகளில் விபத்துக்கள் - இளைஞர் ஒருவர் உட்பட மூவர் பலி
இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - மீரிகம வீதியின் கந்தவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதில் பயணித்த ஒருவர் மற்றும் பாதசாரி படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆனமடுவ - நிக்கவரடிய வீதியில் 96 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள், ஆனமடுவ நோக்கிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ஆனமடுவ, பெரியதக்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்துடன் தொடர்புடைய, லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.