தமிழர் பகுதியில் பதிவான மூன்று விபத்து சம்பவங்களில் இருவர் பலி (Photos)
நாளுக்கு நாள் பல விபத்து சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. எனவே வாகனங்களை செலுத்தும் போது மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டியது ஒவ்வொருவரினதும் சமூகப் பொறுப்பாகும்.
வவுனியா
வவுனியா- குடாகச்சக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
குடாகச்சக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடாகச்சகொடிய மேதாமாவத்தையை சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: ஷான்
முல்லைத்தீவு
விசுவமடு 12 ஆம் கட்டைப்பகுதியில் உந்துருளி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் விசுவமடு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி எதிர் திசையில் மிதிவண்டியில் சென்ற வயோதிபர் மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் தருமபுரம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
54 அகவையுடைய கொழுந்துப்புலவு மயில்வாகனபுரத்தினை சேர்ந்த இரத்தினம் உதயகுமார் என்ற வயோதிபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
செய்தி: யது, கீதன், எரிமலை
யாழ்ப்பாணம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அராலி மத்தி கணவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன் பேருந்தினால் இறங்கி நடந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து இளைஞன் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி: கஜிந்தன்