வேக கட்டுப்பாட்டை இழந்த வான் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து! : ஒன்பது பேர் படுகாயம் (Video)
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 09 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நேற்று (30) மாலை 6.45 மணியளவில் வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி செல்லும் போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், இதன் போது 16 பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வான் அதிக வேகத்தில் சென்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையினால், தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சல்லடை கம்பி பாதுகாப்பு வேலியினை உடைத்துக்கொண்டு சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வரை இவ் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த தனியார் வான் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.