இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி பலி! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது.
195 உயிர்கள்
பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் மீட்பு முயற்சிகள் காரணமாக, அதே காலகட்டத்தில் 195 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன.

காப்பற்றப்பட்டவர்களில் 135 பேர் இலங்கையர்கள் என்றும் 60 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நேற்றைய தினம் சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது, கிரிபத்கொட-மாகொலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்தனர்.
அதிஉச்ச எச்சரிக்கை
இதில் 16 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் அடங்குவர் இவர்கள் அனைவரும் ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாவுக்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதிஉச்ச எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.