கந்தளாயில் இடம்பெற்ற விபத்து: மூன்று மாணவிகள் உட்பட நால்வர் காயம்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி மோதி ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பாடசாலை மாணவிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, நேற்று மாலை (17) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
4, 9, 10வயதுடைய மூன்று மாணவிகளும், வயது 48 ஆன முச்சக்கர வண்டிச் சாரதியும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, முள்ளிப்பொத்தானை பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், கந்தளாய் வாத்தியகம பாடசாலையிலிருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கர வண்டி 91ஆம் கட்டைச் சந்தியில் பலுகஸ் கிராமத்துக்குத் திரும்ப முயன்றபோது நேருக்கு நேர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மாணவிகள் மற்றும் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



