16 வயது சிறுவனின் செயலால் நேர்ந்த விபத்து - கடைகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதம்
வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனின் செயலால் மின்சார கம்பம், சமிக்ஞ்சை கம்பம் மற்றும் பல கடைகளுக்கு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று(27.06.2026) அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட சேதம்
விபத்துக்குள்ளான சிற்றூர்தி, மரக்கறி பண்டங்களை சந்தைக்கு எடுத்து வரும் சமயத்தில் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தி சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்றமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தின் போது மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிக்ஞ்சை கம்பம் மற்றும் கடைகளின் பொருட்கள் மீது சிற்றூர்தி மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.