ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் முடங்கின : அகற்றப்படாத கண்ணிவெடிகளால் ஏற்பட்ட நிலை
பெரும் எதிர்பார்ப்போடு முன்மொழியப்பட்டு கட்டம் 1 செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள ஆனையிறவு வணிக சுற்றுலா மையம் பயனற்று இருக்கின்றது.
தட்டுவான்கொட்டிச் சந்தியில் அமைந்துள்ள இந்த வளாகம் கண்ணிவெடி அபாயத்தை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு கடைத்தொகுதிகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படாத கடைத்தொகுதிகளும் சுற்றுலா வணிக மையத்தினுள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மிக உயரமான நடராஜர் சிலையை நிறுவப்பட்டுள்ள இந்த வளாகம் யாழ் செல்வோருக்கு ஆன்மீக மனநிலையை ஏற்படுத்தி விடுகின்றது.
கட்டம் - 1 செற்றிட்டம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரின் திட்ட நடைமுறைப்படுத்தலால் கட்டம் 1 வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளதாக எடுத்துரைக்கப்படுகின்றது.
ஆணையிறவு வணிக சுற்றுலா மையம் 12.01.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு 12.04.2021 அன்றுடன் முடிந்த நான்கு மாத காலத்தினுள் முடிக்கப்பட்டது. எட்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.
திட்டத்தினை நிறைவேற்றும் நிறுவனமும் அதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனமும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடராஜர் சிலையை ஒரு குறியீட்டு மைய அடையாளமாக இது கொண்டுள்ளதும் நோக்கத்தக்கது.
A9 வீதியிலிருந்து தட்டுவான்கொட்டிக்குத் திரும்பும் சந்தியில் A9 வீதியினையும் உள்ளடக்கியதாக திட்டவரைபு வரையப்பட்டுள்ளதனையும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை மூலம் அறிய முடிகின்றது.
ஆனையிறவு சுற்றுலா வணிக மையத்தில் கட்டி முடிக்கப்படாத கடைத்தொகுதியும் இருக்கின்றது. எதிர்பாராத தடங்களினால் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டதால் அதனை முழுமையாக கட்டி முடிக்க முடியவில்லை. விரைவில் அதனை பூர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை உரியவர்கள் முன்னெடுக்கவுள்ளதாக சந்தியில் உள்ள ஈருறுளி திருத்தக உரிமையாளர் ஒருவருடன் இது பற்றிய கேட்டல்களின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
அகற்றப்படாத கண்ணிவெடிகளால் ஏற்பட்ட நிலை
ஆனையிறவு சுற்றுலா வணிக மையத்தின் திட்ட வரைபுக்கான நிலத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் வரை பயன்படுத்த தடையிடப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்களின் இந்த பகுதியில் கண்ணிவெடியினை அகற்றும் செயற்பாடுகள் ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தொடங்கப்பட்டுள்ளன.
ஆனையிறவு வணிக சுற்றுலா மையம் என பெயரிடப்பட்ட கட்டி முடிக்கப்பட்டு ஒரு வியாபார நிலையமும் வியாபார செயற்பாட்டுக்காக திறக்கப்பட்ட பின்னரே அதன் முன்னுள்ள நிலத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடிகள் உள்ளதாகவும் அவை அகற்றப்பட வேண்டும் என அகற்றும் பயணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்துக்கள் நிகழ்ந்தால் ஏற்படும் இழப்புக்களை இழிவளவாக்குவதற்காக கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளினைச் சூழ மண் நிரப்பப்ட்ட பெரியபைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
போர் நடந்த நிலத்தில் வெடிபொருட்கள் இல்லை என்ற சான்றுப்படுத்தல் பெற்று அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கரைச்சி பிரதேச சபையினர் மக்களின் பாதுகாப்பில் அக்கறையின்றி இருந்துள்ளமையானது ஆச்சரியமாக இருப்பதோடு கவலையளிப்பதாக சமூகவியல் ஆய்வாளர் ஒருவரிடம் இது தொடர்பில் கேட்ட போது குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது வெடிபொருட்கள் தொடர்பிலும் கருத்திலெடுக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது.
வெடிபொருட்கள் இருக்கிறது என ஆனையிறவு சுற்றுலா வணிக மையம் என பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் எல்லைப்படுத்தி வெடிபொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் முன்னரே அந்த கடைத்தொகுதிகளில் ஒன்று வியாபார செயற்பாடுகளுக்காக திறந்து பயன்படுத்தப்பட்டது என மக்களோடு உரையாடும் போது அறிய முடிந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
27 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை
இலங்கையில் மிகவும் உயரமான நடராஜர் சிலை ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தினுள் நிறுவப்பட்டமையும் இங்கு நோக்கத்தக்கது.
A9 வீதியில் பயணிப்போருக்கு ஆன்மீக மனநிலையை ஏற்படுத்தி விடுவதோடு சைவ சித்தாந்த சிந்தனையை ஊட்டிவிடுவதில் பெரும்பங்காற்றுவதாக மக்களில் பலர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட நன்கொடையாளர்களும் புலம்பெயர் கொடையாளர்களினதும் பங்களிப்போடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் ஆலோசனைக்கேற்ப கரைச்சி பிரதேச சபையினரால் இந்த நடராஜர் சிலை நிறுவப்பட்டு 12.03.2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
A9 வீதியிலிருந்து தட்டுவான்கொட்டிக்கு திரும்பும் சந்தியில் வணிக சுற்றுலா மையத்தின் வரவேற்பு முனையில் நிறுவப்பட்டுள்ளது.
அக்கறையுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளா நடைபெறுகின்றன
ஈழத்தமிழர்கள் தாயகத்தில் திட்டமிட்டு செயற்படுத்தி வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மக்கள் மீதுள்ள அக்கறையின் பால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்பி அவற்றை ஆராய வேண்டிய தேவை தோன்றியுள்ளது.
பல அபிவிருத்திச் செயற்பாடுகள் கட்டடங்களோடு முடிந்து போய்விட்டன.மக்களிடையே அவை பொருளாதார முன்னேற்றத்தினை ஏற்படுத்தவில்லை.மாறாக பொழுதுபோக்குப் போல நேரத்தை செலவளித்துவிட்ட ஒரு செயற்பாடாகவே பல அபிவிருத்திச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
வாழ்வாதாரங்களுக்கான வியாபார நிலையங்கள் சில காலம் இயங்கி பல காலம் கட்டடங்கள் மட்டுமே இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பல கட்ட அபிவிருத்தி செயற்பாட்டின் பின்னரே முழுமைபெறும்.
அவ்வாறிருக்கும் போது முதற்கட்ட செயற்பாடுகளே வெற்றியளித்ததாக இல்லை என கருத வேண்டிய சூழலில் மக்கள் நலன் கருதி வினைத்திறனான முயற்சிகளுக்கூடாக அபிவிருத்திகள் விரைவாக மக்கள் மயமாக்கப்பட்டு நின்று நிலைக்கும் வண்ணம் முன்னெடுக்க வேண்டும்.இல்லையேல் அந்த முயற்சிகள் வீணாகிப் போய்விடும்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
