தசுன் சானக்க மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 போட்டி தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம் பெற்றுள்ளதாகெ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி டி10 போட்டித் தொடரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவிரோத பந்துவீச்சு பதிவானதாகவும், இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் மோசடி எதிர்ப்பு பிரிவு விசாரணை
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி எதிர்ப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக பல வீரர்கள் குறிப்பிடத்தக்களவு நோ போல்களை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பந்து வீசப்பட வேண்டிய கோட்டை தாண்டி கால் பதித்து வீசினால் அது நோ போல் அல்லது சட்டவிரோத பந்து என அறிவிக்கப்படும்.
எனினும் சிலரது கால்கள் கோட்டை தாண்டி நீண்ட தூரம் பதிந்து பந்து வீசப்பட்டதாகவும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நோ போல்கள் வீசப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சில பந்துவீச்சாளர்கள் வழமைக்கு மாறான வகையில் இந்த நோ போல்களை வீசியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் பங்கேற்ற சில வீரர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் விளையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அபுதாபி லீக் போட்டித் தொடர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க தொடர்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடரில் ஓர் போட்டியில் தசுன் சானக்க வீசிய முதல் மூன்று பந்துகளில் 30 ஓட்டங்களை அவர் எதிரணிக்கு வழங்கியிருந்தார்.
இதன் போது அவர் நான்கு நோ போல்களை வீசி இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது டெல்லி புல்ஸ் மற்றும் பெங்கால் டைகர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த சம்பவம் பதிவாகி இருந்தது.
தசுன் சானக்க ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அபுதாபி லீக் போட்டித் தொடர்களில் ஏற்கனவே இவ்வாறான மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |