தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் அரசியல் அந்தகர்களே : ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுவதோடு யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநிலைய முன்றலில் நேற்று (17) இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலை
தொடர்ந்து உரையாற்றுகையில், “தமிழ்ப் பொதுவேட்பாளர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த அரசியல் அந்தகர்கள் விமர்சிக்கின்றார்கள்.
எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலையில் உள்ள அரசியல் அந்தகர்களின் விமர்சனமே இது.
இதுவரையில் இந்தியா தமிழ்ப் பொதுவேட்பாளருக்குச் சாதகமான கருத்துகள் எதனையும் எங்கும் தெரிவித்திருக்கவில்லை.
மாறாக, கொழும்பு அரசியலில் தலையீடு செய்ய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திக்கும் பொதுவேட்பாளர் என்பவர் இடையூறாகவே அமைவார்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்பதற்காகவே நிறுத்தப்பட்டுள்ளார் என சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குக் கேட்டுத் திரியும் தமிழ்அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |