ரணிலுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு போராட்டக்காரர்களிடம் மஹ்ரூம் கோரிக்கை
புதிய ஜானாதிபதியாக பதவியேற்றிருக்கும் ரணிலுக்கு காலி முகத்திடல் போராட்டக்காரார்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணிலின் நடவடிக்கைகள்
“கோட்டாபயவின் பதவி விலகலின் பின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியவுடன் அவர் மறுநாள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 57 நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளை நீண்டகால அடிப்படையில் பெறுவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
இவ்வாறாக சிறந்ததொரு தலைமைத்துவமாக சர்வதேசமும் இவரை ஏற்றுள்ளது. இது போன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவின் பின் அவர் சஜித், மகிந்த, மைத்திரி போன்றவர்களிடமும் இணைந்து செயற்படுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது நாட்டை கட்டியெழுப்ப சிறந்த நிலையாக உள்ளது.
113 ஆசனங்களை பெற வேண்டிய ரணில் 134 ஆசனங்களை தனிமனிதனாக நின்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தை அசிங்கப்படுத்த நினைத்தபோது பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினரை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று இனவாதத்தை கைவிட்டு பசில், கோட்டா, மகிந்த போன்றவர்களும் ஐக்கிய இலங்கையை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆறு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். ஐந்து இலட்சம் வாக்குகளை கூட பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் போராட்டக்காரர்களை தூண்டிவிடாமல் இந்த விடயத்தில் நிதான போக்குடன் செயற்பட வேண்டும்.
சந்தர்ப்பம் வழங்க வேண்டும்
கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்கள் ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பத்தை குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது வழங்கி பார்க்க வேண்டும்.
மக்களை முடிச்சு போட்டு செல்லும் நிலையில் இருந்தால் மக்களும், நாடாளுமன்றமும் அவரை பதவி இழக்க செய்ய வேண்டும்.
தற்போதைய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரிபால போன்றவர்களும் நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைப்புக்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டும்.
அசேதனப்பசளை தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகிறது இது தொடர்ந்தும் இந்த நிலையில் விவசாயிகளுக்காக வழங்க நடவடிக்கைகளை எடுக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



