மற்றுமொரு அரச விடுமுறை! அரசாங்கம் பரிசீலனை
இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த விடயம் சமய விவகாரங்கள் தொடர்பான விசேட குழுவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச பொதுவிடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வன்னி மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றக் குழு அறையில் நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
விடுமுறை நாளாக அரசு பிரகடனப்படுத்த
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் புனித நாளாகும்.
இந்நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

அந்த வகையில் நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்குப் பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
எனினும், இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பின்னர் இந்த புனித தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை. மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்துக்கள் தமது புனித நாளில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இதனைப் பொது விடுமுறை நாளாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.