மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(28) மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற காரும் மட்டக்களப்பிலிருந்து களுதாவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கிரான்குளம் வீதி வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரை செலுத்திச் சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.