அம்பாறையிலுள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை (Photos)
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.றயீஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனைகளானது சுகாதார வைத்திய அதிகாரி வழிகாட்டலின் கீழ் நேற்று(21.08.2023) இடம்பெற்றுள்ளது.
பரிசோதனை நடவடிக்கைகள்
இந்நிலையில் உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட பாத்திரங்கள், ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய் என்பனவும் கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பரிசோதனை நடவடிக்கைகளில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பொது சுகாதாரப் பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















