புலம்பெயர் உறவுகள் முன்வந்தால் ஆதரவு பிரேரணை வழங்கப்படும்: வேழமாலிகிதன்
உணவு பாதுகாப்பிற்காக புலம்பெயர் உறவுகள் முன்வந்தால் ஆதரவு பிரேரணை வழங்கப்படும் என தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று(15) காலை 10 மணியளவில் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சியில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு வரையில் உணவு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பிரேரணை நிறைவேற்றப்படும்
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள், தமது வீடுகள், உறவினர் வீடுகளில் நெல்லை சேமித்து வைக்க ஏற்பாடு செய்யலாம்.
அத்துடன், அவர்கள் முன்வந்தால் முதலீடு ஒன்றின் ஊடாக நெல்லை களஞ்சியப்படுத்தவும் முடியும். அதன் ஊடாக, அடுத்த ஆண்டுக்கான உணவை பாதுகாக்க முடியும்.
மேலும், மாவட்டத்திலிருந்து குறைந்த நிதியில் நெல் ஏற்றப்படுதல் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படுதல் போன்றவற்றை தடுக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 1 மூடை நெல் அல்லது அரிசி பாதுகாக்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் கே.கருணாகரன் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று எமது மாவட்டத்திலும் நெல் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக புலம்பெயர் உறவுகள் முன்வந்தால், போதுமான வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்து
தரும் வகையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நம்பிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏறத்தாள 25 ஆயிரம் ஏக்கர் சிறுபோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அறுவடையும் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.
அறுவடை முடிந்ததும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டு, அரிசியாக மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுவது வழமையாக காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தில் பஞ்சம் ஏற்படாத வகையில் புலம்பெயர் உறவுகளிடமிருந்தான இந்த அழைப்பு விவசாயிகளையும், உணவு
தட்டுப்பாட்டிலிருந்து மக்களையும் பாதுகாக்க வழியமைத்து கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.



