பிரித்தானியாவில் இடம்பெற்ற கோடீஸ்வரரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
பிரித்தானியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் சுட்டன் (Richard Sutton)கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, அவரது வளர்ப்பு மகனே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஹொட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்த சர் ரிச்சர்ட் சுட்டன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்த அவரது வளர்ப்பு மகன், 34 வயதான தாமஸ் ஸ்செஸ்பேர் (Thomas Schreiber )குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த ஏப்ரல் 7ம் திகதி, கோடீஸ்வரர் ரிச்சர்ட் சுட்டனின் 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான குடியிருப்பில் இருந்து பொலிஸாருக்கு தகவல் சென்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார், மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் சர் ரிச்சர்ட் சுட்டனை ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன்னர், சுமார் 9.15 மணியளவில் சர் ரிச்சர்ட் சுட்டன் மரணமடைந்துள்ளார். உடற்கூராய்வில் மார்பில் கத்தியால் தாக்கியதாலையே அவர் மரணமடைந்துள்ளது உறுதியானது.
இதனிடையே, சர் ரிச்சர்ட் சுட்டன் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 3 மணி நேரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் தாமஸ் ஸ்செஸ்பேர் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணைகளில் தமது வளர்ப்பு தந்தையை கொலை செய்ததையும் தமது தாயாரை கொல்ல முயன்றதையும் மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நவம்பர் 29 முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.