முல்லைத்தீவில் வெற்றியளித்துள்ள கறுவா செய்கை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுமதி பயிரான கறுவா செய்கை வெற்றியினை கண்டுள்ளதாக ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர் லி.துமிலன் தெரிவித்துள்ளார்.
உண்மை கறுவா இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டது பொதுவாக இலங்கையின் மத்திய மலைநாட்டில் இது நன்கு வளரக்கூடியது. இலங்கையை பொறுத்தவரையில் கண்டி மாத்தளை ஹப்புதலை போன்ற பகுதிகளிலும் சிங்கராஜ வன பகுதிகளிலும் இந்த கறுவா பயிர் செய்யப்படுகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் சாதாரணமாக வீடுகளில் இது வளர்க்கப்படுகின்றது வர்த்தக நோக்கம் இல்லாவிட்டாலும் வீட்டுத் தோட்ட செய்கையாக இது பயிர் செய்யப்படுகின்றது.
கறுவா செய்கை
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சிநிலையத்தில் இப்பயிர்ச்செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் அதிலிருந்து கறுவாப்பட்டை பெற்றுக் கொள்ளும் செயல்முறை ரீதியிலான பயிற்சி வகுப்புகளும் விவசாயிகளுக்கு நடைபெற்று வருகிறது.தேவையான தரமான கறுவா நடுகைப்பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
வெவ்வேறு வகையான மண்களில் இது வளரக்கூடியது. கறுவா பயிர்ச்செய்கைக்கு மிகவும் ஆழமான மண் தேவையாகும். வருடாந்த மழைவீழ்ச்சி 1700 மில்லிமீற்றரிலும் அதிகமாக இருத்தல் வேண்டும் வெப்பநிலை 25 - 32 பாகை செல்சியஸ் ஆக இருத்தல் வேண்டும். இது பூரண சூரிய ஒளி விரும்பி தாவரம் ஆகும்.
கறுவா பயிர்ச்செய்கைக்கு ஈர வலயம் மிகவும் பொருத்தமானது. ஆனால் இடை வலயத்திலும் உலர் வலயத்திலும் இந்த செய்கை மேற்கொள்ள முடியும்.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலனின் ஆலோசனை வழிகாட்டலில் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் பண்மை முகாமையாளர் லி.துமிலனின் ஒழுங்கமைப்பில் பயிற்சி நிலையத்தில் கறுவா செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கறுவா செய்கை தொடர்பில் விவசாயிகள் மேலதிக தகவல்களை ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |