2000 தொன் எரிவாயுடன் கொழும்பு வந்துள்ள கப்பல்
இரண்டாயிரம் மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துருள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் ஏற்றி வரப்பட்டுள்ள எரிவாயுவின் தரத்தை அறிய அதன் மாதிரியை பெற்றுக்கொண்டதாக அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க(Shantha Dissanayake) தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த இரண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவில் மர்கெப்டன் இரசாயனம் உரிய தரத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற காரணத்தினால், அதில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதை தடுத்து நிறுத்த நுகர்வோர் அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.
காணப்படும் நிலைமையில் நாட்டில் பல பிரதேசங்களில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.