மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு
மட்டக்களப்பில் இயங்கி வரும் உணவகம் ஒன்றை சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி
கழிவு நீரை வெளியில் திறந்து விட்டமைக்காக எதிர்வரும் 22ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமைக்காகவும் இன்று (18.08.2024) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உணவகத்தினை மூடி பொது சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர்.
நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சி
இந்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
மேலும், இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ஆம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1)ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்குல் செய்துள்ளார்.
அத்துடன், உணவகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்தப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.