மக்களின் கஷ்டத்திற்கு மத்திய வங்கியே காரணம்!முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது,மத்திய வங்கி பொருளாதாரத்தை சுருக்கியதால் மக்கள் அவதிப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆளுநரின் கருத்து
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது வெளியிடப்பட்ட சில அறிக்கைகளை பார்க்கும் போது அவை மத்திய வங்கியின் வகிபாகம் பற்றிய புரிதல் இன்மையால் கூறப்பட்டதாகவே தோன்றுகின்றது.
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. இருப்பினும் நாட்டின் நிதிக் கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே உள்ளது.
நிதிக் கொள்கை
இலங்கை மக்களும் வர்த்தகர்களும் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் மத்திய வங்கியை நாடுகின்றனர். இதற்கு மத்திய வங்கியின் சில முன்னாள் ஆளுநர்கள் நிதிக் கொள்கை பற்றி கவனம் செலுத்தாமையே காரணமாகும்.
நிதிக் கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதிக் கொள்கையின் அடிப்படையில் வேறொருவருக்குச் செய்யக்கூடிய அதிகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
ஒரு சுதந்திரமான மத்திய வங்கியாக நிதி முடிவுகளை எடுப்பவர்கள் நிதிக் கொள்கையை கட்டுப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.”என கூறியுள்ளார்.