வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 06ம் நாளான நேற்று சர்வதேச மகளிர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதி கோரிய போராட்டம் நடைபெறும் இடத்தில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் தெரியப்படுத்தி, நீதிமன்ற தடையுத்தரவினை வழங்க முற்படுகையில் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அவ்விடம் இல்லாமையால் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.
பொலிஸார் வருகைதந்து தடையுத்தரவினை வழங்க முற்பட்டபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதைக் காணமுடிந்தது.
அதேநேரம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் அமைப்புகளில் உள்ள பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் உமது பங்கு என்ன?,மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா?,பெண்களின் மனித உரிமைகள் எங்கே,வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டின ஆளமுடியாதா போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றம் போன்ற உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் சபையில் பெண்கள் பிரதிநிதித்துவம் வெறுமனே 5.3 வீதங்களே காணப்படுகின்ற நிலையில் அவை மாற்றப்பட்டு சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்றைய இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.
அத்துடன் லண்டனில் கவனீர்ப்பில் ஈடுபட்டு வரும் அம்பிகை அம்மணியின் கோரிக்கைகளுக்கும் நாட்டு அரசாங்கம் உரிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
