யாழில் போதைப்பொருள் கடத்தும் முன்னாள் போராளிகள் - அருண் சித்தார்த் பகிரங்கம்
நேர்மையற்ற ஒரு சில பொலிஸாருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.சிவில் சமூக நிலையத்தின் இயக்குனர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை
வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையும் கடத்தல்களும் வர்த்தகமும் பாரியளவில் இடம்பெற்று வருவதை நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
இதற்குப் பின்னால் இராணுவம், பொலிஸ் இருப்பதாக ஒரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளாலும் சில ஊடகங்களாலும் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வடக்கின் கரையோரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது, அதாவது அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.
வடக்கில் பயங்கரமான போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு மிகக் குறைவாக காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகக் குறைந்த விழிப்புணர்வு இருப்பது மிகவும் பிரதானமாக காணப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில்
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குறிப்பாக சுன்னாகப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த வியாபாரம் இடம் பெறுகின்றது. ஆனால் அவர் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.
பொலிஸாருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள்
நேர்மையற்ற ஒரு சில பொலிஸாருக்கும் இந்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் செயற்படுவதற்குரிய வளங்கள் போதாமையாக உள்ளமை பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்படுகின்றது.
சில இடங்களில் பொலிஸாருக்கு மேல் இடங்களில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்திற்கு ஒரு
விடயத்தினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விசேடமான போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்றை உருவாக்கி அதனை
செயற்படுத்துவதன் மூலம் வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கோரிக்கை விடுக்கவுள்ளோம். அத்துடன் வடக்கில் ஒரு புனர்வாழ்வு நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.
ஒட்டு மொத்தமாக அனைவரும் இணைந்து இந்த விடயத்தை கையில் எடுத்தால் மாத்திரமே
வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.
கொழும்பில் போதைப்பொருள் சம்பந்தமான வழக்கில் சட்டத்தரணிகள் ஈடுபடுவதில்லை அதே போன்று சிறுவர்கள் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் தாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு செய்வதில்லை என கூறுகின்றார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தமிழ் தேசியம் பேசும் சில சட்டத்தரணிகள் கூட போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்கள் எனவே இந்த வழக்காடும் செயற்பாட்டினை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தும் பட்சத்தில் போதைப்பொருளோடு கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் திருந்துவதற்குரிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.
தொடர்ச்சியாக சமூகவிரோதிகளாக இனங்காணப்படுபவர்களின் வழக்குகளுக்கு சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகாது விடும் பட்சத்தில் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் திருந்தக்கூடிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள்
ஒரு சிலரோடு எமது அமைப்பு கலந்துரையாடிய போது முன்னாள் போராளிகள் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக போராட்டத்தில் இணைந்ததன் காரணமாக தற்போது விடுதலையாகி தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு வேறு வழி இல்லாது இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
குறிப்பாக இங்கிருந்து படகுகளில் இந்தியாவிற்கு சென்று போதைப்பொருள் கடத்தலில்
ஈடுபட்டு வருகின்றார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள்
என்ற ரீதியில் மிகவும் துணிந்தவர்கள் என்பதனால் அவர்களுக்கு இலகுவாக
இந்தியா சென்று போதைப்பொருட்களை கடத்தக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
