பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பாலின் தரத்தை உயர்த்த அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை
கிராமிய பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கால்நடைத் தீவனப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு (NLDB) சொந்தமான பண்ணைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கால்நடை வளங்கள் பிரிவினால் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த கிராமிய மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாக்கங்களைத் தாங்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (IRDCRP) கீழ், எதிர்பாராத அவசர நிலைமைகளுக்கான பதிலளிப்புக் கூறு (CERC) தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு, ஹட்டன் - கொமர்ஷியல் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
கால்நடை வைத்தியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கள உத்தியோகத்தர்கள் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கும் சேவைகள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பண்ணையாளர்கள் விசேட சலுகைகள்
அத்துடன், குறித்த சேவைகள் தொடர்பில் பால் பண்ணையாளர்கள் திருப்தியடைந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக பார்க்கப்படுகின்றது. பிரதேச சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தீவிரமாகத் தலையிட வேண்டும்.

அதே போன்று, பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான கால்நடைத் தீவனப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகளைப் புல் மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டங்களின் மூலம் பால் பண்ணையாளர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் நகர்வு
பால் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் திரவப் பாலுக்கு பால் சேகரிப்பு நிலையங்கள் ஊடாக நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

பால் பண்ணைத் தொழில் என்பது தனிநபர் வருமானத்திற்கான ஒரு வழிமுறை மாத்திரமல்ல, அது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் தேசியப் பணியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கால்நடை வளங்கள் திணைக்களங்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றன என்றார்.
10 நாட்களுக்குள் முடிவு..! சிறையிலுள்ள பௌத்த தேரர்களின் காவியுடை விவகாரத்தில் அரசின் அதிரடி வர்த்தமானி