சுவிஸில் இடம்பெற்ற பல்சமயங்களின் இரவு நிகழ்வு
சுவிட்ஸர்லாந்தின் (Switzerland) பேர்ன் மாநிலத்தில் சமயங்களின் இரவு நிகழ்வு, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் (நளித்திங்கள்) நடைபெறும்.
வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் உலகக் கண்ணோட்டங்களைச் சேர்ந்த மக்களை உரையாட அழைக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பேர்ன் மாநிலத்தின் ஆட்சி அடையாளமாக விளங்கும் பட்டிமன்ற அரங்குக்குள் நிகழ்வு தொடங்கப்பட்டது.
பங்கேற்றோர்
29 சமய அமைப்புக்கள் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் சைவநெறிக்கூடம் பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மண்டபத்தில் மெனோநிற்றென் சபையுடன் இணைந்து சைவநெறிக்கூடம், 09.11.2024 சனிக்கிழமை 08.00 மணிக்கும் மற்றும் 08.30 மணிக்கும் இரு நிகழ்வுகள் வழங்கியது.
பல்சமய இல்லத்துடன் இணைந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பல்சமயங்களின் இரவு நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் இசையுடன் வரவேற்கப்பட்டனர்.
இதன்பின்னர் உரை மன்று நிகழ்வு தொடங்கப்பட்டு, சைவநெறிக்கூடத்தின் சார்பாளர்களாக இளையோர்கள் செல்வி சம்யுக்தா சசிக்குமார், அபிராமி சுரேஸ்குமார், மகிழினி சிவகீர்த்தி நிகழ்வில் பங்கெடுத்து என் குரல், உன் குரல், எங்கள் உலகம் குரல்களின் உரையாடல் தலைப்பில் உரையாடினர்.
மேலும், மெனோநிற்றென் சபை சார்பாக டோறெதேயா, செல்வன் சொலத்தூர்னெர் மற்றும் யூர்க் ஆகியோர் பங்கெடுத்தனர். சுவிட்ஸர்லாந்துப் பண்பாட்டு இசை மற்றும் தமிழர் இனிய இசையுடன் சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.