குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த கடற்படையின் உறுப்பினர் ஒருவர் கைது
போரு மூனா என்ற தேடப்படும் கொலைச் சந்தேகத்துக்குரியவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கடற்படையின் உறுப்பினர் ஒருவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் இந்த தம்பதியரையே காவல்துறையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
13 கொலைகள்
2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி ஹங்வெல்லவில் வியாபாரத்தளம் ஒன்றின் உரிமையாளரைக் கொன்றது உட்பட 13 கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேடப்படும் குற்றவாளியான போரு மூனா, கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி விமானம் ஏறுவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், விமான நிலைய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதன்போது மூன்று பௌத்த பிக்குகள் விமான நிலைய காவல்துறைக்கு சென்று 'போரு மூனா' பற்றி விசாரித்தனர், இதன்போது கைது செய்யப்பட்ட போரு மூனா,அங்கிருந்து தப்பிச் சென்றார்.
எவ்வாறாயினும், ஹங்வெல்ல வியாபாரத்தள உரிமையாளரின் கொலையின் பின்னர், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக,அவர் கைது செய்யப்பட்ட போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றவாளி தப்பிய சம்பவம்
அதன்படி, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தவேளையில் குறித்த வீட்டின் தம்பதியினரும் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்தது.
பின்னர், விரிவான விசாரணைகளை அடுத்து, இருவரும் நேற்று நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, காவல்துறையின் பிடியில் இருந்து போரு மூனா தப்பிய சம்பவம் தொடர்பில்
இரண்டு பௌத்த பிக்குகள் மற்றும் காவல்துறை உறுப்பினர் ஆகியோர் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




