கற்பிட்டிக்கு ஒரு சட்டம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு சட்டமா : நா.வர்ணகுலசிங்கம் காட்டம்
கற்பிட்டிக்கு ஒரு சட்டம் யாழ்ப்பாணத்திற்க்கு ஒரு சட்டமா என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று(26.09.2023) யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இ்வ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட கூட்டம்
“கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் கடற்தொழில் நீரியல் வளத்துறையினரால் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக் கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து நீரியல் வளத்துறை அதிகாரிகள் வருகைதந்திருக்கிறார்கள்.
இங்கே உள்ள சங்கங்களுக்கு அறிவித்ததாக கூறப்பட்டிருந்தது.ஆனால் பல முக்கியமான கடற்தொழில் அமைப்புகளுக்கு அறிவிக்கவில்லை.
ஒரு கட்சி சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டே அந்தக் கூட்டமானது இடம் பெற்றிருக்கிறது.
மொத்தம் 14 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும் கூட்டத்தில் கடற்தொழில் புதிய திருத்தச் சட்டம் என்ற போர்வையில் ஒரு புத்தகம் கொண்டு வந்து அங்குள்ளவர்களுக்கு கொடுத்து விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.
புதிய சட்டம்
அதில் அதிகாரி ஒருவர் உரையாற்றி இதுதான் புதிதாக கொண்டுவரவிருக்கிற சட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அங்கிருந்த பச்சோந்தியொருவர் இந்த சட்டம் சரி என்று சொல்லியபோது, நெடுந்தீவில் இருந்து வந்த சமாச பிரதிநிதி ஒருவர் குறித்த சட்டம் தொடர்பில் எதிர்த்திருக்கிறார்கள்.
ஏன் இந்த சட்ட புத்தகத்தில் நடுப்பகுதியில் வெள்ளை பக்கமாக இருக்கிறது, ஏன் இடை வெளி விடப்பட்டிருக்கிறது, என்ன காரணம் என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இதனைக் கொண்டு வந்து காண்பித்து மக்கள் எல்லோரும் மீனவர்கள் சமூகம் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவித்து அந்த நடுப்பகுதியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் உங்களுக்கு வேண்டிய விடயங்களை பதிப்பு செய்து அதனை வெளியிடுவதற்கு தானே இந்த முயற்சியை செய்து இருக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த புத்தகத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியபோது அந்த கூட்டம் நடந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது”என சுட்டிகாட்டியுள்ளார்.
