உயர்தர விடைத்தாள் திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (4.4.23) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச கொடுப்பனவு
வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரின் பிள்ளைகளும் உயர்தரப் பெறுபேறுகளை எதிர்ப்பார்ப்பதாகவும், அதனால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதால் இனி அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தன்னால் இயன்ற அளவு முயற்சி எடுப்பதாக கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீரஎழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை சரிபார்த்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடத்த முடியும் என்றார்.
இதேவேளை, நாடு முழுவதும் 350 சர்வதேச பாடசாலைகள் உள்ளதாகவும், இந்த சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பாடசாலைகள் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ஒழுங்குபடுத்த முடியாது என தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தனியான ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு சட்டங்களை இயற்றவுள்ளதாக தெரிவித்தார்.