பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய வெலேசுதாவின் சகோதரர் தாஜு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ம் திகதி மாலை கல்கிஸ்ஸை, படோவிற்றை பொலிஸ் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரி ஒருவரும், அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தாஜு என்றழைக்கப்படும் சுனிமல் குமார என்பவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இவர் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமார என்பவரின் சகோதரர் ஆவார்.
பொலிஸார் கைது செய்வதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் சுனிமல் குமார, தன் இடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை குத்தி, காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போதைக்கு களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த தாஜு என்றழைக்கப்படும் சுனிமல் குமார, நேற்றிரவு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.