முள்ளியவளை பகுதியில் அட்டகாசம் புரிந்த குழுவினர் - பொலிஸார் மீது குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் 20.05.21 இரவு முறிப்பு பகுதியினை சேர்ந்த குழுவொன்று இரும்பு கம்பிகள், பொல்லுகள், வாள்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில்,முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரதேசங்கள் முற்றுமுழுதாக முடக்கப்படட பகுதியாக இருந்த நிலையில் முடக்கப்பட்ட இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.
முள்ளியவளை பொலிஸ் பிரிவு முடக்கப்பட்ட நிலையில் இவர்கள் முறிப்பு பகுதியில் இருந்து சுமார் எட்டு கிலோமீற்றர் தூரம் வந்து எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என பாதிக்கப்படடவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் மூவர் வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,எதற்காக தாக்கினார்கள் என்று தெரியவில்லை எனவும், தன்மீதும் ,இரண்டு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ,தனக்கு தலையில் 24 தையல் போடப்பட்டுள்ளதாகவும், கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ,தான் வடை வியாபாரம் செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும், இவர்களது இந்த செயற்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .
அத்தோடு குறித்தகுழு பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையது எனவும், முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்கியது, வளவள திணைக்களத்தின் அதிகாரிகள் மீது தாக்கியமை போன்று பல்வேறு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவர்களை இரண்டு நாட்களாகியும் சி. சி. ரி வி காணொளி ஆதாரங்கள் கொடுத்தும், இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை. எமக்கு பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. ஊடகங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . எனவே சம்மந்தப்பட்டவர்கள் இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
முடக்க நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் எட்டு கிலோமீற்றர் தூரம் சென்று தாக்குதல் நடத்த எவ்வாறு இராணுவம், பொலிஸார் அனுமதி வழங்கியது? இவ்வாறு பல்வேறு குற்றச்செயல்கள் செய்தும் இவர்கள் மீது ஏன் இன்னும் ஒரு இறுக்கமான நடவடிக்கை எடுக்கவில்லை ?இவ்வாறு இவர்கள் செயற்பட பாதுகாப்பு தரப்பு ஏன் அனுமதிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





