கிண்ணியாவில் வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை - கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை - அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் ஒன்பது வயதுச் சிறுமி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று (26) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பலியானவர் காக்காமுனை அரை ஏக்கர் பகுதியைச் சேர்ந்த குத்புள்ளாஹ் பாத்திமா றிஹா என கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எதிரே வந்த லொறி மோதியதில் சிறுமி பலியாகியுள்ளதாகவும், விபத்து இடம்பெற்றதை அடுத்து சிறுமி கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் அங்கிருந்து பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.