யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல்
வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஆகஸ்ட் 30ம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் இடம்பெற்றிருந்தது.
'தேசத்தின் வீரர்கள், தேசத்துக்காக மடிந்தவர்கள்' என்ற வாசகம் பொதிக்கபட்ட பிரன்சு தேச விடுதலையினை மையப்படுத்தியிருந்த திடலில் முன்னே, காணமலாக்கப்பட்டவர்களின் ஒளிபடங்கள் தாங்கிய இருக்கைகள் இடப்பட்டிருந்தன.
வைக்கப்பட்ட ஒரு தொகுதி இந்த ஒளிப்படங்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை குறியீட்டுரீதியாக அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நாடுகளின் உலகபட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டி தனது கருத்துரையில் பிரன்சு மொழியில் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.
மனித உரிமைகளுக்காக, காணாமலாக்கப்பட்டவர்களுக்காக ஐ.நா பல்வேறு தீர்மானங்களை முன்வைத்திருந்தாலும், அத்தீர்மானங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியினை இதுவரை பெற்றுத்தரவில்லை என தனது விசனத்தை தமிழீழ மக்கள் பேரவையின் பிரதி திருச்சோதி அவர்கள் தெரிவித்திருந்தார்.
கண்முன்னே நடக்கின்ற சாவுகளுக்கு அப்பால், வலிந்து காணாமலாக்கப்படுகின்றவர்களுக்கு கண்ணுக்கு தெரியாது நடக்கின்ற சம்பவங்கள் வலியிலும் கொடியது என மூத்த போராளி நாயகன் தெரிவித்திருந்தார்.
தாயகத்திலும் இடம்பெறுகின்ற தாய்மார்களின் போராட்டம், ஒட்டுமொத்த தேசத்தினதும் நீதிக்கான குரலாக உள்ளதெனத் தெரிவித்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதிநிதி மேத்தா, அர்ப்பணிப்புடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம் எனக்குறிப்பிட்டிருந்தார்.
தாய்மண்ணின் நீதிக்காக ஒருதாய் பிள்ளைகளாய் அமைப்புரீதியாக ஒருங்கிணைத்து இப்போராட்டம் இடம்பெற்றது என நிகழ்வின் நிறைவில் குறித்துரைக்கப்பட்டது.