மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் முள்ளாமுனை எனும் இடத்தில் இன்று பகல் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தியாகராசா சுரேஸ்கரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.
விபத்தின் போது படுகாயமடைந்த நபர் செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதும் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொழில் நிமிர்த்தம் கொழும்பிற்குச் சென்று நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
இவர் ஆயித்தியமலையிலுள்ள தனது வீட்டிலிருந்து வவுணதீவு சுகாதார அலுவலகத்திற்குத் தனது மோட்டார் சைக்கிளில் செல்கையில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி வைத்தியசாலையிலிருந்த சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல
பகுதிகளில் விபத்துகள் தொடர்பான தகவல்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.