நீர்கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை: நேரில் பார்த்த மனைவி வைத்தியசாலையில்
இளம் குடும்பஸ்தர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நீர்கொழும்பில் இன்றைய தினம் (23.05.2023) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய அன்ரனி றொபேட் என்ற இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
அவர் தனது மனைவியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தானபோது, முகமூடி அணிந்து கூரிய ஆயுதங்களுடன் காரில் வந்தவர்கள், அவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி
சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் குடும்பஸ்தர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் மனைவி (வயது 25) மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
இந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் இடம்பெற்ற போது குறித்த குழந்தை அயல் வீடான தாத்தாவின் (உயிரிழந்தவரின் தந்தை) வீட்டில் இருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடன் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |