கொழும்பில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலைக்கான காரணம் வெளியானது
கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கொலைக்கான காரணம்
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையே மாணவி சத்துரிகா ஹன்சிகாவின் மரணத்திற்கான காரணம் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (27) தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் என்பனவற்றை கவனத்தில் கொண்டதன் பின்னர் நீதவான் விசாரணை முடிவடைந்ததாக அறிவித்து இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குருதுவத்தை பொலிஸாருக்கு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையின் போது, கொழும்பு குதிரை பந்தய பாதுகாப்பு அதிகாரி ஜெயசுந்தர மற்றும் உயிரிழந்த மாணவியின் நண்பரான அபேசிங்க ஆராச்சிகேயின் டொன் நிபுன் அபேசிங்க ஆகியோரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபரான கொழும்பு பல்கலைக்கழக மாணவரான பசிது சதுரங்க, சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலைக்கான காரணம்
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என்ற மாணவன் குறித்த யுவதியை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தமை விசாரணையில் தெரியவந்திருந்தது.
இதேவேளை, கடந்த விசாரணையின் போது சந்தேகநபரான இளைஞன் கொலைக்கான காரணத்தை வாக்குமூலம் அளித்திருந்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருந்ததாவது,
சந்தேகநபரின் வாக்குமூலம்
சத்துரியிடம் முக்கியமாக பேச வேண்டும் என அவளை ரேஸ்கோர்ஸ் அரங்கிற்கு அழைத்து வந்தேன்.பின்னர் கண்களை கட்டி கழுத்தில் கத்தியால் குத்தினேன்.
சூட்டி என்னை எப்போதும் மனநோயாளி என்று அழைப்பாள். அதனால் தான் எனக்கு வலி ஏற்பட்டது. அவள் வேறு யாருக்கும் சொந்தம் ஆகக்கூடாது, அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லி குதிரைப் பந்தய அரங்கிற்கு அழைத்து வந்தேன்.
2019 முதல் நான் மனநோய்க்கு மருந்து எடுத்து வருகிறேன். 2020ல் சூட்டியுடன் நட்பு ஏற்பட்டது. நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் 4-5 மாதங்களுக்கு பின்பு அதைப் பற்றி அறிந்தாள். நான் காயப்படுத்தப்பட்டேன். அவள் எங்கள் உறவை நிறுத்த முற்பட்டாள்.அவள் மாறினாள். அவள் தொடர்ந்து என்னை "பைத்தியம்" என்று அழைத்தாள்.
வேறொரு உறவின் காரணமாக அவள் மாறிவிட்டாளா என்று நான் சோதித்தேன். ஆனால் அவளுக்கு அத்தகைய தொடர்பு இல்லை. அவள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவள் என்னை எப்போதும் மனநோயாளி என்று அழைப்பதால் நான் வேதனைப்பட்டேன். உறவும் இல்லாததால் அவள் எனக்கு சொந்தமில்லை. நான் அவளை வேறு யாரும் வைத்திருக்கக்கூடாது என்பதற்காக அவளைக் கொல்ல திட்டமிட்டேன்.
கடந்த சனிக்கிழமை அவள் என்னிடம் தகராறு செய்தாள். இந்த உறவை முடித்து விடுவோம் என்றாள். அதற்குள் அவள் உறவை நிறுத்திவிட்டாள். அவளை கொல்ல திட்டமிட்டேன். நானும் ஞாயிற்றுக்கிழமை வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கத்தி ஒன்றை வாங்கினேன். செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து கத்தியை பையில் வைத்துக்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றேன்.
காலையில் முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பிறகு,முக்கியமாக பேச வேண்டியுள்ளது. போட்டி மைதானத்திற்குச் செல்லலாமா என்று "சூட்டி" யிடம் கேட்டேன். முதலில் அவள் மறுத்தாள்.பின்னர் கட்டாயப்படுத்தப்பட்டதால் ஒப்புக்கொண்டார்.
இருவரும் ரேஸ்கோர்ஸ் நோக்கி நடந்தோம். குளத்தில் நின்று பேசினோம். நான் அவள் மீது கோபம் கொண்டதால், அவளைக் கொல்ல நினைத்தேன். நான் அவளிடம் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. என அவளை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்து வந்தேன்.கண்களை கட்டி கழுத்தில் கத்தியால் குத்தினேன்.
அவள் கண்களை மூடியிருந்த துணியை கழற்றிவிட்டு உதவிக்காக கத்தினாள். அப்போது, மீண்டும் கத்தியால் குத்தினேன்.சம்பவ இடத்திற்கு அருகில் இளம் பெண்கள் குழு ஒன்று இருந்ததால், அவர்கள் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று பயந்து, நான் அந்த இடத்தை விட்டு ஓடினேன்.
ஓடிப்போனாலும் "சூட்டி" என்று திரும்பிப் பார்த்தேன், அந்த நேரத்தில் "சூட்டி" அசைவின்றி கிடந்தாள். அப்போது நேராக ஒரு பேருந்தில் ஏறி வெல்லம்பிட்டிக்கு சென்றேன். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயில் வரவில்லை. அதனால் வீட்டிற்கு சென்றேன்.
நான் வீட்டிற்குச் சென்று எனது புத்தகப் பைகள் மற்றும் பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு இரண்டு முறை கொலன்னாவ ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன் இறுதியாக, பொலிஸார் என்னை கைது செய்துவிட்டனர் என்றும் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.