செம்மணி படுகொலை விவகாரத்தைகைகழுவி விடவே அரசு முயற்சிக்கிறது! சோமரத்ன ராஜபக்ச குற்றச்சாட்டு
காணாமல்போனோர் பற்றிய பணிமனையினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி, அந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து கைகழுவி விடுவதற்கே முயற்சிக்கின்றனர் என்று கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோமரத்ன ராஜபக்சவைக் காணாமல்போனோர் பணிமனையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாகச் சந்தித்தனர்.
செம்மணி படுகொலை
இந்தச் சந்திப்பு தொடர்பில் சோமரத்ன தம்மிடம் தெரிவித்தவை என்று அவரின் மனைவி எஸ். சி. விஜயவிக்ரம ஊடகங்களுக்குத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

"செம்மணி படுகொலை தொடர்பான விவரங்களைக் கேட்டறியும் நோக்கில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை எனது கணவரை வெலிக்கடைச் சிறைச்சாலையில் சந்தித்தனர்.
இதன்படி அந்த அலுவலகத்தின் தலைவரால் எனது கணவரிடம் கூறப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி, அந்த விவகாரத்தை முடிவுக்குக்கொண்டு வந்து, சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைச் சீரமைப்பதற்கே முயற்சிக்கின்றனர் என்ற விடயம் தெளிவாகப் புலப்பட்டதாக எனது கணவர் கூறினார்.
சோமரத்ன ராஜபக்ச குற்றச்சாட்டு
செம்மணி மனிதப் புதைகுழி குறித்து 09.07.2025 அன்று எனது கணவர் சார்பில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்ததுடன் 04.10.2025 அன்று இந்த விவகாரம் தொடர்பில் எனது கணவர் அவரது சட்டத்தரணி ஊடாக சத்தியக்கடதாசி ஒன்றையும் வழங்கியிருந்தார்.

அதில் அவர் 1996 ஆம் ஆண்டளவிலே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், அரசாங்கம் இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சொற்பளவானோருக்கு இழப்பீட்டை வழங்கி, இந்த விவகாரத்தைக் கைகழுவி விடுவதற்கே முயற்சிக்கின்றது." என்றும் கூறியுள்ளார்.