25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பட்டம் பெற்ற கணனி பொறியியலாளர்
அமெரிக்காவில் கணனி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற 25 வயதான நபர் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் நாராஹென்பிட்டி கித்துல்வத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்படும் போது, அவரிடம் இருந்து 7.8 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளார்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ள சந்தேக நபர்
25 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் 6 சூறையாடல் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த சந்தேக நபர் சுமார் ஒரு கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான ஐ.போன் சில தங்கச்சங்கிலிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சந்தேக நபர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டு, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிளில் சுற்றித்திரிந்து வீதியில் செல்லும் பெண்களின் கைப்பைகளை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்களின் கைப்பைகளை கொள்ளையிட்டுள்ள சந்தேக நபர், அதில் இருந்த பணம், நகைகள்,அலைபேசிகள் என்பவற்றுடன் வங்கி பண மீளப்பெறல் அட்டைகள் மூலம் வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.
இதற்காக சந்தேக நபர் தனது கணனி அறிவை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுள்ள சந்தேக நபர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடவும் ஆங்கிலத்தில் எழுதவும் தெரிந்தவர்.
சந்தேக நபர் மகரகமை தெபானம பிரசேதத்தில் பெண் சட்டத்தரணி ஒருவரின கைப்பையை கொள்ளையிட்டு அதில் இருந்த பெறுமதியான அலைபேசி, பணம் மீளப்பெறல் அட்டையை பயன்படுத்தி பணத்தையும் எடுத்துள்ளார்.
கொழும்பில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்
நாராஹென்பிட்டி, வெல்லம்பிட்டி, மகரகமை, கொஹூவலை, மிரிஹானை, பிலியந்தலை, மாலபே, வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளை உட்பட பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அலைபேசியில் வேறு ஒருவருடன் உரையாடுவது போல் வர்த்தக நிலையங்களுக்கு எதிரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அருகில் சிறிது நேரம் இருந்து, அதன் உரிமையாளர் அருகாமையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இவ்வாறு ஆறு மோட்டார் சைக்கிள்களை சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார். மகரகமை பன்னிப்பிட்டி செத்சிறி பிளேஸ் பகுதியில் வசித்து வந்துள்ள இநத சந்தேக நபர், ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.