இலங்கை மின்சார சபைக்கு 8 கோடி ரூபாய் நட்டம்
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையால் 08 மாதங்களில் சுமார் 08 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
சிலர் மின்சார மானியை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாலும் இது தொடர்பான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகிறது.
நிதி இழப்பு
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மின்சாரத்தை அவ்வாறான முறையில் பெற்றுக் கொண்டதனால் மின்சார சபைக்கு 7 கோடியே 90இலட்சத்து 74,857 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களில், மின் மீட்டர் மாற்றம் தொடர்பாக 1,041 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 7 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 26 இலச்சத்து 45,207 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது.




