12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வவுனியா மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
12 வயதுடைய பேத்தியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாக இருந்த நிலையில், இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2024 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
குறித்த வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில்கொண்டு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலர்களில் ஒருவரான தாத்தாவினாலேயே இக்குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமையை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச சட்டத்தரணியால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதை புறக்கணித்து 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்ப்பு
அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்தவும், அதனை செலுத்தத்தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது அரச சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5