800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது - திடுக்கிடும் பின்னணி தகவல்!
தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி தகவல்கள்
கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர்.

பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.
அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர். கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.
போலி இலக்கத் தகடுகள்
ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.
பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார்.
பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam