கோர விபத்தில் 8 வயது சிறுவன் மரணம்! தந்தை படுகாயம்
அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது ஹயஸ் ரக வான் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 8 வயதுடைய பாடசாலைச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(15.11.2026) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று(16.11.2026) இரவு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தந்தை வைத்தியசாலையில்
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், தனது தனியார் வகுப்பை நிறைவு செய்துவிட்டுத் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த ஹயஸ் ரக வான் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேற்படி சிறுவனின் தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் ரக வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.