போதைப்பொருளுடன் கைதானவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை: மன்னார் மேல் நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா தண்டப்பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி, மன்னார் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவரிடமிருந்து 54 கிராம் 40 மில்லிகிராம் எடைக் ஐஸ் போதைப் பொருள் பொதி மீட்கப்பட்டிருந்தது.
சிறைத்தண்டனை
இதனைத் தொடர்ந்து அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அந்தச் சான்றுப் பொருளில் தூய நிலையில் 3.38 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாவும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன.

விசாரணைகளின் முடிவில், எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.
இதன்போது தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்பத்தின் போது, எதிரி இளம் குடும்பஸ்தர் என்றும், ஒரு சிறிய குழந்தையின் தந்தை என்பதால் அவரைத் திருந்துவதற்கு நீதிமன்றம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் எதிரி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
எனினும், நீதிமன்றம், எதிரி இவ்வழக்கில் கைது செய்யப்படுவதற்குக் இரண்டு மாதங்களுக்கு முன்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் குறைந்த அளவிலான நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் வழக்கு ஒன்றில், குற்றவாளியாக காணப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், நீதிமன்றம் முன்பு வழங்கிய திருந்துவதற்கான வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி, கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருள் அவரது சொந்த நுகர்வுக்காக உடமை கொள்ளப்பட்டதல்ல என்பதையும், அது வியாபாரம் செய்யும் நோக்கத்துக்காக வைத்திருக்கப்பட்ட பெறுமதியான பொருள் என்பதையும் கவனத்தில் எடுத்து அக் கோரிக்கையை நிராகரித்து சட்டத்தினால் விதிக்கப்படக் கூடிய உச்சபட்ச தண்டனை எதிரிக்கு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில், எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆண்டுகள் வீதம் மொத்தம் 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 இலட்சம் ரூபாயா வீதம் மொத்தம் 1 மில்லியன் (10 இலட்சம்) ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் நெறிப்படுத்தியிருந்ததுடன், தீர்ப்பு வழங்கும் வேளையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி இம்மானுவேல் விக்டர் நேரு தேவவிதுரன் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
தண்டனை பெற்ற மேற்படி நபர், தற்போதும் வேறொரு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.