சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு ஐ.மக்கள் சக்திக்கு அழைப்பு:8 அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க உள்ள சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு எட்டு அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தின் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கம்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் தற்போதைய அமைச்சரவை தற்காலிகமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் விமல் வீரவங்ச தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போகின்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.