கடன் மறுசீரமைப்பு-இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சு நடத்த 8 பேர் கொண்ட குழு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைய இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளில் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
நாணய நிதியம் மற்றும் உலக வங்கி விடுத்த அறிவிப்பு
ஜனாதிபதியுடன் பேசி துரிதமான நடவடிக்கையை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது விடுத்த அறிவிப்புக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி,ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க, சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் தலையீட்டுடன் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்நாடுகளை சாதகமான இடத்திற்கு கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது தெரிவித்திருந்தனர்.