புதுக்குடியிருப்பில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் 8 பேர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் சட்டவிரோதமாக காடழித்த குற்றச்சாட்டின் பேரில் 8 பேரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திம்பிலி குளத்திற்கு சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப்பகுதிகள் கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு, அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன், சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் விபரங்களுடன் ,கோம்பாவில் கிராம சேவையாளரினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டமையுடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களும் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள புதுக்குடியிருப்பு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.