சீரற்ற காலநிலையால் யாழில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு - வெளியான நிலவரம்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் காற்றுடன் தொடர்ச்சியான மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது
தவிசாளரின் வாகனம் சேதம்
மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனின் வாகனம் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் வாகனம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
இன்றையதினம் சேந்தாங்குளம் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக தவிசாளர் அங்கு சென்ற வாகனத்திற்கு மேல் முறிந்து விழுந்துள்ளது.
வெள்ள வாய்க்கால் அடைப்பு
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின் வெள்ள வாய்க்கால் மழைகாரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால் வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்தது.
இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடக்கலான குழுவினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவாய்க்கால் காணப்படுகிறது.
செய்தி - தீபன், கஜிந்தன்
