உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இந்த விடயம் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி இணைப்புகளின் கணக்கெடுப்பு
இந்த கணக்கெடுப்பின்படி, அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும், 49வீதமான சேவைகள் இயங்கவில்லை என்றும், 22வீதமானவை செயல்பாட்டில் இருந்தாலும் , யாருக்கும் பதில் வழங்குவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42வீதமானவற்றில் இருந்து பதிலளிக்கப்படவில்லை மற்றும் 44வீதமானவற்றில் இருந்து மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கணக்கெடுக்கப்பட்ட 23 மாநகர சபை பகுதிகளில், 4வீதமான தொலைபேசிகள் உத்தியோகபூர்வ செயல்பாட்டில் இல்லை என்றும், 44வீதமானவற்றில் இருந்து பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், பதிலளிக்கப்பட்ட அந்த உத்தியோகபூர்வ தொலைபேசிகளில் கூட, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரல கூறியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் பொதுமக்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றைப் பயன்படுத்த முற்படும்போது உண்மையில் அவை பொதுமக்களுக்கு பயன் தரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
